கூகுள் மேப்பில் காட்டப்படாத உலகின் 5 ரகசிய மற்றும் மர்மமான இடங்கள் - ஏன் தெரியுமா?
கூகுள் மேப்பில் காட்டப்படாத உலகின் 5 ரகசிய இடங்கள் குறித்த தகவல்.
ரகசிய இடங்கள்
உலகில் உள்ள அனைத்து இடங்களையும் நம்மால், நாம் இருக்கும் இடத்தில் இருந்தே பார்க்க முடியும். ஏனெனில் அந்த அளவிற்கு தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.
அதற்கு நமக்கு கூகுள் மேப் உதவுகிறது. எந்த ஊருக்கு எப்படி செல்வது, எவ்வளவு தூரம் என்பதெல்லாம் துல்லியமாக நமக்கு கூகுள் மேப் காட்டிவிடுகிறது. ஆனால் கூகுள் மேப்பில் இல்லாத ரகசிய இடங்களும் உள்ளது.
பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாட்டில் இருக்கும் இந்த இடங்களை கூகுள் மேப்பில் தெளிவாக பார்க்க முடியாது. அது எந்தெந்த இடங்கள் என்பதை பார்ப்போம்.
மார்கூல் அணு தளம் - பிரான்ஸ்
பிரான்ஸின் உயர்மட்ட அணு ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக மார்க்கூல் அணு ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மார்க்கூல் அணு தளத்தை, கூகுள் மேப்பில் தேடினால், அப்பகுதி முழுவதும் பிக்சலேட்டாக தெரியும்.
பிரான்ஸ் நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த இடத்தை பிக்சலேட் செய்து வைத்துள்ளது கூகுள் நிறுவனம்.
அம்சித்கா தீவு - அலாஸ்கா
1950களின் பிற்பகுதியில் நிலத்தடி அணு சோதனைக்காக அமெரிக்க அணுச்சக்தி ஆணையத்தால் அம்சித்கா தீவு தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு 3 முறை நிலத்தடி அணு சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அலாஸ்காவில் இருக்கும் அம்சித்கா தீவை பாதிக்குமேல் தெளிவாக கூகுள் மேப்பில் பார்க்க முடியாது. தற்போதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் அந்த தீவு, கதிரியக்க பொருட்களின் கசிவுக்காக தொடர்ந்து கண்காணிப்பு வளையத்தில் உள்ளது.
ஜீனெட் தீவு - ரஷ்யா
ரஷ்யாவின் கிழக்கு சைபீரியக் கடலில் ஜீனெட் தீவு அமைந்துள்ளது. ரஷ்யாவின் ராணுவத் தளமாக கருத்தப்படுவதால், இப்பகுதி கூகுள் மேப்பில் இருந்து முற்றிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியை பார்க்க கூகுள் மேப்பில் நீங்கள் டைப் செய்தால், அப்படியான ஒரு இடமே இருப்பது உங்களுக்கு காண்பிக்காது. ரஷ்யாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடமாக ஜீனெட் தீவு உள்ளது.
கோஸ் சர்வதேச விமான நிலையம் - கிரீஸ்
கிரீஸ் நாட்டின் கோஸ் தீவில் கோஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. கோடைகாலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் இந்த தீவு திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
இந்த விமான நிலையம் கூகுள் மேப்பில் மிகவும் மங்கலாக தெரியும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியாக இங்கு பொழுதை கழிப்பார்கள்.
கட்டெனோம் அணு மின் நிலையம் - பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் லக்சம்பர் நகருக்கு அருகில் கிராண்ட் எஸ்டில் பகுதியில் இந்த அணு உலை அமைந்துள்ளது. உலகில் இருக்கும் மிகப்பெரிய அணு உலைகளுள் 9வது அணு உலையாக கட்டெனோம் அணுமின் நிலையம் உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக கூகுள் மேப்பில் இந்த அணு உலையை கூகுள் மேப்பில் பார்க்க முடியாதபடி, முழுப் பகுதியும் பிக்சலேட் செய்யப்பட்டுள்ளது.