ரிஷப் பண்ட் செய்த தவறால் இந்திய அணிக்கு ஏற்பட்ட இழப்பு - அதிருப்தியில் ரசிகர்கள்
இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் ஒரு மெகா தவறை செய்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 223 ரன்களும், தென்னாப்பிரிக்கா 210 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 14 ரன்களும், புஜாரா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இதனிடையே தென்னாப்பிரிக்க அணி பேட் செய்யும் போது 49.5 ஓவரில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தவறு ஒன்றை செய்தார். அதன்படி ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை 17 ரன்கள் இருந்த பெவுமா அடித்தார். அந்த பந்து நேராக ஸ்லிப்பில் நின்ற புஜாராவை நோக்கி சென்றது. அதனை ரிஷப் பண்ட் பிடிக்க டைவ் அடிக்க பந்தை இருவரும் தவறவிட்டனர்.
தவறவிட்ட பந்து நேராக அவர் வைத்திருந்த ஹெல்மேட்டில் பட்டது. இதனால் நடுவர்கள் பெனால்டியாக எதிரணிக்கு 5 ரன்களை வழங்கினர். இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஹெல்மேட்டை இந்திய வீரர்கள் அப்புறப்படுத்தினர். ஹெல்மேட் மீது பந்து பட்டால் 5 ரன்கள் பெனால்டி என்று தெரிந்தும், அதனை ஏன் அங்கு வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த பெனால்டி ரன் வெற்றி, தோல்வியில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.