மறைந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குறித்த 5 முக்கிய தகவல்கள் - ரசிகர்கள் கண்ணீர்

Andrew Symonds
By Petchi Avudaiappan May 16, 2022 06:43 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்று கார் விபத்தில் காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள டவுன்ஸ்வில்லே பகுதியில்  சைமண்ட்ஸ் சென்றுக்கொண்டிருந்த  கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் புரண்டதில் அவர் காயமடைந்ததாகவும்,நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 

1998 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை ஆல்ரவுண்டராக வலம் வந்து ஆஸ்திரேலிய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தார். ஐபிஎல் போட்டிகளிலும் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை அணிக்காக தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். 

அவரைப் பற்றிய யாரும் அறியப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் க்ளவுசெஸ்டர்ஷைர், லங்காஷயர், சர்ரே மற்றும் கென்ட் ஆகிய அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி சைமண்ட்ஸ் விளையாடியுள்ளார். 

இதில், 

  •  க்ளவுசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் 1995 ஆம் ஆண்டில் 20 வயதான சைமண்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 254 ரன்களை எடுத்தார்.  இதுதான் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் அதிக பட்சம் ஸ்கோராக  27 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் தான் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இச்சாதனையை முறியடித்தார். 
  • 2003 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்ற நிலையில் அந்த தொடரில் 326 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட்டுகளை சைமண்ட்ஸ் வீழ்த்தி இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் 143 ரன்கள் எடுத்து பலரது கவனத்தை தன்பக்கம் ஈர்த்த அவர் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆதரவால் தான் அணிக்கு பரிசீலிக்கப்பட்டார். அதில் சாதித்தும் காட்டினார். 
  • கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக தனது சின்னமான ட்ரெட்லாக்ஸ் சிகை அலங்காரத்துடன் விளையாடிய சைமண்ட்ஸ் 2009 ஆம் ஆண்டில் ஒரு தொண்டு இயக்கத்திற்காக தனது ட்ரெட்லாக்ஸ் சிகை அலங்காரத்தை இழக்க முடிவு செய்தார். உலகின் மிகச்சிறந்த ஷேவ் நிதி திரட்டும் நிகழ்வின் ஒரு பகுதியாக பிப்ரவரி 14 நேரலையில் மொட்டையடித்துக் கொண்டார்.
  • 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய போது ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக அவர் ஆடினார். இந்த தொடரில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை சைமண்ட்ஸ் பெற்றார். 
  • கூடைப்பந்தில் பிரிஸ்பேன் புல்லட்டுக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் கிரேட் லெராய் லாக்கின்ஸ் உடனான அவரது ஒற்றுமையின் காரணமாக மக்கள் “ராய்” என்று சைமண்ட்ஸை அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.