வேனுடன் கிணற்றில் மூழ்கி 5 பேர் பலி - 45 சவரன் தங்க நகைகள் மீட்பு
கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
கிணற்றில் பாய்ந்த கார்
தூத்துக்குடி, வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் மோசஸ்(50). கோவை துடியலூரில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், மோசஸ் தனது சொந்த ஊரான வெள்ளாளன்விளையில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் காரில் வந்துள்ளார். இடையில் குற்றாலத்துக்கு சென்று அருவிகளில் குளித்துள்ளனர்.
தொடர்ந்து சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் அருகில் சென்றபோது, மோசஸின் கட்டுப்பாட்டை இழந்த கார் தரைமட்ட கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக பாய்ந்தது. இதில் காரில் இருந்து வெளியே வந்த மோசஸ் மகன் கெர்சோம் (29), ரவி கோயில்பிச்சை மகள் ஜெனிபா எஸ்தர், கெர்சோம் மனைவி சைனி கிருபாகரன் (26) ஆகிய 3 பேரும் மீட்கப்பட்டனர்.
5 பேர் பலி
ஆனால். மோசஸ், அவருடைய மனைவி வசந்தா (49), சந்தோஷ் மகன் ரவி கோயில்பிச்சை, அவருடைய மனைவி கெத்சியாள் கிருபா, கெர்சோம் மகன் ஸ்டாலின் (1½) ஆகிய 5 பேரும் சடலமாக மிட்கப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை திமுக எம்.பி., கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி, கிணற்றுக்குள் மூழ்கி கிடந்த 20 சவரனுக்கு மேற்பட்ட நகைகளை மீட்பதற்காக தூத்துக்குடி முத்து குளிக்கும் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் நகைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.