கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்த விவகாரம் - காரணம் என்ன? விளக்கம் கொடுத்த ஐஜி கண்ணன்
விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் விளக்கம் கொடுத்துள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் உயர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மீதமுள்ள 33 பேர் பல்வேறு மருத்துவமனைகளில், மருத்துவ கண்காணிப்பில் நலமாக இருந்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறை வழக்குப் பதிவு செய்து, சாராயத்தால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டது. இதில், முக்கியக் குற்றவாளியான மரக்காணத்தைச் சேர்ந்த அமரன் என்பவரை கைது செய்துள்ளது. மேலும், தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக, விஷச் சாராயம் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளது. மேலும், வேறு குற்றவாளிகள் யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரூக்கரணை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மனைவி அஞ்சலை மற்றும் அஞ்சலையின் தாயார் வசந்தா மற்றும் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெண்ணியப்பன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் விஷச் சாராயத்தை குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சின்னதம்பி, வசந்தா, வெண்ணியப்பன் மற்றும் சந்திரா ஆகியோர் தங்கள் வீடுகளிலேயே இறந்துள்ளனர்.
சாராயத்தில் மெத்தனால் கலப்பு?
மேலும், அஞ்சலை என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்கள் விஷச் சாராயம் அறிந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷச் சாராயம் விற்ற குற்றவாளி அமாவாசை என்பவர் அதே மதுபானத்தை அருந்தி உடல்நலம் சீராக காணப்பட்ட போதிலும், மருத்துவ சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளை கைது செய்ய தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில், இந்த இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட நபர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை அறிந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக்கில் வாங்கப்பட்ட மதுவினை உட்கொண்டதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற வதந்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்
இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் சீனிவாசன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மரியசோபி மஞ்சுளா மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 10 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து, மாவட்டம் முழுவதும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
அப்போது, விழுப்புரம் சரக காவல்துறை பொறுப்பு துணைத் தலைவர் பகலவன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் உடன் இருந்தனர்.