ராமேஸ்வரத்தில் தஞ்சம் அடைந்த மேலும் 5 இலங்கைத் தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள் தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அத்தியாவசிய பொருட்களான பால், முட்டை, ரொட்டி போன்ற பொருட்களுக்கும் வழியில்லாமல் மக்கள் திண்டாடி வரும் நிலையில், உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி பைப்பர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களில் 22 குடும்பங்களை சேர்ந்த 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ளனர்.
அதேபோல் தமிழகம் வர முற்படும் போது சிலர் இலங்கை கடற்படை மற்றும் ராணுவத்திடம் மாட்டிக் கொள்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வவுனியா கடற்கரையில் இருந்து பைபர் படகில் தயாளன், லதா, டன்சிகா, ராஜலக்ஷ்மி, 2 மாத கை குழந்தை தக்டரா உட்பட 1 குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் கடற்படை போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் கடற்படை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், படகு ஒன்றிற்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் என அதிக தொகை செலுத்த உள்ளதால் போதிய வருமானம் இல்லாமல் அங்கேயே ஏராளமான தமிழர்கள் தவித்து வருகின்றனர்.