லாரி மோதி ஒருவர் பலி... 30 லாரிகளை அடித்து நொறுக்கிய மக்கள்...
நெய்வேலியில் நிலக்கரி சுரங்க லாரி மோதி ஒருவர் உயிரிழந்ததால் மற்ற லாரிகளுக்கு பொதுமக்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2வது அனல்மின் நிலைய பின்புறத்தில் பயன்படுத்தப்பட்ட நிலக்கரி சாம்பல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த சாம்பல்கள் பல்வேறு பணிகளுக்காக வெளியே எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. தினமும் 150க்கும் மேற்பட்ட லாரிகளில் நிலக்கரி சாம்பல்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகள் மேலக்குப்பம் என்ற பகுதியில் வரும் போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக லாரி மோதியதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி நெய்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நிலக்கரி சாம்பல்கள் எடுத்துச் செல்லும் லாரிகள் மூலம் பல்வேறு விபத்துகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டிய அவர்கள், 30 லாரிகளை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல் 5 லாரிகளுக்கு தீ வைத்தனர். இதனால் பதற்றத்தை தவிர்க்க அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.