அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை சம்பவம் - 5 லாட்ஜ்களில் கைவரிசை காட்டிய மர்மநபர்!
சென்னை பெரியமேட்டில் துணிச்சலாக அடுத்தடுத்து 5 லாட்ஜ்களில் அரங்கேறிய கொள்ளை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரியமேடு மற்றும் வேப்பரி நெடுஞ்சாலை பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள், இந்த லாட்ஜ்களில் தங்கி வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி முதல் அப்பகுதியில் இருக்கும் விடுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த 2 நாட்களில் இதுவரை 5 விடுதிகளில் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிசிடிவி காட்சிகள் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரே ஒரு நபர் தான் நேர்த்தியாக உடையணிந்து 5 கடைகளிலும் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிலும் நேற்று காவல் நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள இரு வெவ்வேறு விடுதிகளில், மறு வீடு வந்த மாப்பிள்ளை போல் சாவகாசமாக இரு சக்கர வாகனத்தை வாசலில் நிறுத்தி விட்டு, 33 ஆயிரம் ரூபாய் வரை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கொள்ளையனை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமடைந்துள்ளனர்.