'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டவர்களை தனியாக எதிர்கொண்ட மாணவி முஸ்கான் ; 5 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தது ஜாமியத்

hijabcontroversy karnatakastudentprotest studentmuskan mandyacollegebangalore jamiat-ulama-i-hind 5lakhreward
By Swetha Subash Feb 09, 2022 07:02 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவ மாணவிகள் காவி துண்டு மற்றும் ஷால் அணிந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கி போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.

ஒரு சில கல்வி நிலையங்களில் கல்வீச்சு சம்பவங்களும் ஏற்பட்டதால் மேலும் எந்த அசம்பாவிதங்கள் எற்படாமல் இருக்க

இன்று முதல் கர்நாடகாவில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார் மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பர்தா அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவி ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய முற்பட்டப்போது

அந்த மாணவியை முற்றுகையிட்டு சக மாணவர்கள் பின்தொடர்ந்து போய் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டனர்.

அத்தனை மாணவர்களுக்கு மத்தியில் தனி ஆளாக போராடிய மாணவி பதிலுக்கு அல்லாஹு அக்பர் என ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினார்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்லூரி முதல்வரும் கல்லூரி ஊழியர்களும் மாணவி முஸ்கானை பத்திரமாக அழைத்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மாணவிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

பர்தா அணிந்து வந்த முஸ்லீம் மாணவியை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில்

மாணவியோ எனது கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான் விரும்பவில்லை. அவர்கள் என் நண்பர்கள். இனி அவர்கள் இது போல் நடந்து கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நாட்டின் முன்னணி இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான ஜாமியத் உலமா-இ-ஹிந்த், கர்நாடகா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து 'அல்லா-உ-அக்பர்' என்று கோஷமிட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஒரு ட்வீட்டில், பீபி முஸ்கான் தனது அரசியலமைப்பு மற்றும் மத உரிமைகளுக்காக கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் எழுந்து நின்றதாக தெரிவித்துள்ளது.