தாய்லாந்தில் இருந்து சென்னை கடத்தி வரப்பட்ட 5 தேவாங்கு குட்டிகள் பறிமுதல்
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட 5 தேவாங்கு குட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பையில் தேவாங்கு குட்டிகள்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மட்டும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒருவரின் பை லேசாக அவைவதை கண்ட அதிகாரிகள் அவரிடம் இருந்த பையைக் கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.
அந்த பையில் அரிய வகை ஆப்ரிக்கா, இந்தோனேஷியா நாடுகளைச் சேர்ந்த 5 தேவாங்கு குட்டிகள் இருந்தன. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
விசாரணையில்,வெளிநாட்டிலிருந்து விலங்குகள் கொண்டு வர அனுமதி பெற்ற ஆவணங்களும், விலங்குகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த ஆவணங்களும் அவரிடத்தில் இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவுத் துறைக்கு சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
மேலும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அரியவகை தேவாங்கு குட்டிகளை மீண்டும் தாய்லாந்திற்கே அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.