அசத்தலான 5 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ... பொதுமக்கள் மகிழ்ச்சி
திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தலான 5 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியது. மே 7 ஆம் தேதி முதலமைச்சராக முதல்முறையாக மு,.க ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனிடையே ஓராண்டு நிறைவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஓராண்டு நிறைவின் கொண்டாட்டமாக தலைமைச் செயலகம், சட்டசபை வளாகம், அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் போன்றவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சட்டசபை கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் தனது ஓராண்டு கால அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், இல்லத் தேடி கல்வித்திட்டம், உள்ளிட்ட பல சாதனைகளைப் அவர் பட்டியலிட்டார் . மேலும் தேர்தலின்போது திமுக அளித்த 500 வாக்குறுதிகளில், 200 வாக்குறுதிகளுக்கு மேல் நிறைவேற்றப்பட்டு விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை, 1) ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க புதிய திட்டம். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். மற்ற அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.
2)ஊட்டசத்து குறைபாட்டை களைய 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் .டெல்லியை போன்று தமிழகத்திலும் "தகைசால் பள்ளிகள்" உருவாக்கப்படும்.
3)ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போல, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.மாநகராட்சி, நகராட்சிகளில் 708 நகர்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.
4)180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
5) தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட உள்ளது. நிறைவேற்றப்படாத தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைப்படி, சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் இணைந்து முன்னுரிமை அடிப்படையில் தேவைகளை நிறைவேற்றித் தரப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களின் முக்கியமான 10 திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்க வேண்டும். இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.