ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி - பீதியில் மக்கள்
கர்நாடகாவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட 46 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளிடையே கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் தான் எந்தவொரு நாட்டினாலும் வைரஸ் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடிவதில்லை.
ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகையைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதனிடையே கர்நாடகாவில் இரண்டு பேருக்கு இந்த புதிய ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இருவருக்கும் லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும் அறிகுறிகளும் கூட தீவிரமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலால் இந்திய மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
ஒமிக்ரான் கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் பெங்களூரில் வசித்து வருபவர் என்றும் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் கர்நாடகாவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட அந்த 46 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து அந்த 5 பேரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இது அம்மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் 46 வயதான நபர் பெங்களூருவில் சுகாதார ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அவருக்குக் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.