கல்லூரி விடுதியில் தூக்கிட்டு 4 ஆம் ஆண்டு மாணவி தற்கொலை - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

By Petchi Avudaiappan Apr 25, 2022 04:50 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்த வெங்கட்வர்தன் என்பவரது  மகள் நந்தினி(வயது 22) கோவை அவிநாசி சாலை பீளமேட்டில் உள்ள தனியார் (பி.எஸ்.ஜி) மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வந்த நந்தினி இன்று காலை வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை. 

அதேசமயம்  கல்லூரி வகுப்புக்கு நேரமானதால் அவரது அறைக் கதவை மற்றொரு அறையில் உள்ள மாணவி தட்டியுள்ளார்.நீண்ட நேரமாகியும் எந்தவித சத்தமும் இல்லாததால் இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் அம்மாணவி கூறியுள்ளார். உடனடியாக விடுதி காப்பாளரும் நந்தினி அறையை தட்டி வெகு நேரமாகியும் திறக்காததால் அறையின் ஜன்னலை உடைத்து பார்த்துள்ளனர். 

அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் நந்தினி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார்  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறுவைசிகிச்சை செய்யும் கத்தியை பயன்படுத்தி மணிகட்டு நரம்புகளை அறுத்த பின்னர் துப்பாட்டாவால் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.

ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி அறை என்பதால் நந்தினி தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரிய வந்தது. மாணவியின் மரணம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் மாணவியின் பெற்றோர்கள் கோவைக்கு சென்றுள்ளனர். தற்கொலைக்கான கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில் இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.