மனைவி உதவியுடன் இளம் பெண்ணை கடத்திய சாப்ட்வேர் இன்ஜினியர் - பரபரப்பு சம்பவம்

bangalore youngladykidnapped aerospaceengineerkidnapped
By Petchi Avudaiappan Jan 24, 2022 04:50 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

பெங்களூரில்  இளம் பெண் ஒருவரை சாப்ட்வேர் இன்ஜினியர் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் யோகா ஆசிரியர் விகாஸ். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். இவருக்கு 22 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டு விண்வெளி இன்ஜினியர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதனிடையே கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அப்பெண் அலுவலகத்திற்குச் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை எலக்ட்ரானிக் சிட்டி அருகேயுள்ள ஜிகினி பகுதியில் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த பெண் ஸ்கூட்டியில் ஒருவர் மீது மோதி விட்டதாக கூறி அவரிடம் பணம் கறக்க திட்டமிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தன்னிடம் சிலர் தகராறு செய்வதாக தந்தை விகாசிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு வந்த போது மகளை அந்த மர்ம கும்பல் கடத்தியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து விகாஸ் போலீசில் புகார் கொடுத்தார். பெங்களூர் ஊரக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.வம்சி கிருஷ்ணா குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகளை அமைத்தார்.

இதற்கிடையே உங்கள் மகளை விடுவிக்க வேண்டுமானால், நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும் என்று மர்ம நபர்கள் விகாஷிடம் போன் செய்து மிரட்டினார்கள். செல்போன்கள் அடிக்கடி ஸ்விட்ச் ஆப் செய்யப்ட்டதால் மர்ம நபர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவர் விகாஸுக்கு போன் செய்த செல்போன் எண் மூலம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தபோது அவர்கள் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

கடந்த 13 ஆம் தேதி குற்றவாளி ஒருவரின் வீட்டில் இருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். போலீசார் வருவதை அறிந்ததும் அவரை கடத்தியவர்கள் தப்பி ஒடி விட்டனர். இதனையடுத்து இளம்பெண்ணை கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 கைது செய்யப்பட்டவர்கள் ஹுலிமாவு அருகே உள்ள தொட்டகம்மனஹள்ளியைச் சேர்ந்த பார்த்திபன், அவரது மனைவி வசந்தா பார்த்திபன், ரவிச்சந்திரா, மற்றும் முகமது சுலைமான் என்பது தெரியவந்தது. இதில் பார்த்திபன் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆவார். பெண்ணின் குடும்பத்தாரிடம் பணம் பறிக்க திட்டமிட்டு இளம்பெண்ணை கடத்தியதாக அவர்கள் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.