சுரங்க விபத்து: முடிவுக்கு வந்த 17 நாள் போராட்டம்..! 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு!
உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சுரங்க விபத்து
உத்தராகண்ட் மாநிலத்தில், சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது. கடந்த 12ம் தேதி பணி நடைபெறும்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழுவினர் ஈடுபட்டனர். தொடர்ந்து 17வது நாளாக மீட்புப் பனி நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது. சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை காண, அவர்களின் உறவினர்கள் அங்கு கூடினர்.
தொழிலாளர்கள் மீட்பு
இதனையடுத்து சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு நடைபெற்ற மீட்புப் பணிகளை, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் பார்வையிட்டார். பின்னர் மீட்கப்பட்டவர்களிடம் கலந்துரையாடினார். தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களுக்கும், மீட்புக் குழுவினருக்கும் இடையேயான 400 மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது, இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.