1,00,000 நூல்கள் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாண நூலக எரிப்பின் 40வது ஆண்டு நினைவு

Jaffna Library Commomeration
By mohanelango Jun 01, 2021 12:49 PM GMT
Report

இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் பல தசாப்தங்களாக தொடர்ந்து நிகழ்த்தி வரும் ஆதிக்கம், வன்முறையின் வரலாற்று சாட்சியமாக யாழ்ப்பாண நூலக எரிப்பு இருந்து வருகிறது. இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழ் நூல்கள், பல அரிய ஆவணங்களுடன் அப்போதைய ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களுள் ஒன்றாக யாழ்ப்பாண பொது நூலகம் இருந்து வந்தது. உலக வரலாறு முழுவதும் படையெடுத்து பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியங்களைக் கட்டமைத்த பேரரசுகள் தங்களுடைய எதிரிகளை அழித்ததோடு அவர்களின் அறிவாயுதங்களையும் சூரையாடின. புத்தகங்கள், வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டன.

ஒரு இனத்தை அறிவு ரீதியாக அழிப்பதும் இனவழிப்பின் மற்றொரு வடிவமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. அவ்வாறு 20வது நூற்றாண்டில் தமிழர்களின் அறிவாயுதத்தின் மீது சிங்களவர்கள் நிகழ்த்திய வன்முறையே யாழ் நூலக எரிப்பு. 1980களின் தொடக்கம் தமிழர்களின் உரிமைப் போராட்டம் அகிம்சை வழியிலிருந்து ஆயுத வழி போராட்டமாக மாறத்தொடங்கிய காலகட்டம். 1970களிலிருந்தே சிங்கள தரப்பு தமிழர்கள் மீது நிகழ்த்திய ஒடுக்குமுறைகளின் உச்சபட்சமே யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வு.

தமிழர்களின் அரசியல் ஒற்றுமையை கண்டு ஆத்திரமடைந்த சிங்கள கட்சிகள் தமிழர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். 1976 தனிநாடு தான் தீர்வு என வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து தமிழர்கள் மத்தியில் பெரும் அரசியல் எழுச்சி ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஏன் நூலகத்தை எரித்தார்கள்? அந்த வன்முறைகளுக்கு என்ன தான் காரணம்? 1981 மே 31 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம். யாழ்ப்பாணம் நகரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் காங்கேசன்துறை வீதியில் உள்ள நாச்சிமார் கோவில் வளாகத்தில், மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தல் கூட்டமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஜூன் 4-ம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் "தமிழர் விடுதலைக் கூட்டணி" உடைய பிரச்சாரக்கூட்டம் தான் அது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட போலீஸ் தேர்தல் பாதுகாப்பு என்கிற பெயரில் குவிக்கப்பட்டிருந்தனர். யு.என்.பி பிரதான வேட்பாளர் தியாகராஜா சுட்டுக் கொல்லப்பட்டிருந்த சமயம்.

சிங்கள அமைச்சர்களும் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலிசாரை திடிரென்று வந்த ஆயூதமேந்திய சிலர் சுட்டுவிட்டு ஓடிவிட இரண்டு போலிசார் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஆயுதமேந்திய போலிஸ் படை தமது வெறியாட்டத்தைத் தொடங்கியது.

வீதியில் கண்டவர்களையெல்லாம் அடித்தனர். வாகனங்களை கொழுத்தினார்கள். தமிழர்களின் கடைகள், வரலாற்று சின்னங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. சொத்துக்கள் சூரையாடப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு சாம்பலாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஈழநாடு பத்திரிகை அலுவலகமும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகமும் தீ வைத்து நாசமாக்கப்பட்டது. நான்கு தமிழர்கள் வீதியிலேயே கொல்லப்பட்டார்கள். அடுத்த நாள் 1981 ஜூன் 1 திங்கட்கிழமையும் தொடர்ந்த வெறியாட்டத்தின் உச்சமாக திங்கள் இரவு 10 மணியளவில் யாழ் நூலகத்தினுள் நுழைந்த போலிசாரும் வன்முறையாளர்களும் ஒரே இரவில் சாம்பலாக்கினார்கள். இந்த வன்முறைக்கு காரணமான ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.