நடிகர் சங்க கட்டிடம்....40 கோடி கடன்...முடிஞ்சதுமே கல்யாணம் தான்...விஷால்
பேட்டி நீண்ட காலமாக கட்டப்படாமல் இருக்கும் நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி முடித்திட 40 கோடி கடன் வாங்கப்போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க கூட்டம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து சங்கத்தின் பொருளாளர் கார்த்தியும், சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷாலும் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கோவை சரளா, ராஜேஷ், பசுபதி, குஷ்பு, பிரசன்னா, நந்தா, ரமணா, அஜய் ரத்தினம், தளபதி தினேஷ், சரவணன், பிரேம்குமார், உள்பட முன்னணி நடிகர்-நடிகைகள் நாடக கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
விரைவில் நல்ல செய்தி வரும்
இந்த கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த போது விஷால், இரண்டாவது முறையாக தங்களை தேர்ந்தெடுத்த நடிகர் நடிகைகளுக்கு நிச்சயமாக கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்றும் அதற்கான வேளைகளில் சங்க மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
அதே போல, நிச்சயமாக அடுத்த பொதுக்குழு கூட்டம் தங்கள் கட்டிடத்தில் தான் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து, தங்கள் அணி அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதாக விஷால் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட வங்கியில் இருந்து 40 கோடி ரூபாய் கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து, விரைவில் கட்டிட விவகாரத்தில் விரைவில் நல்ல செய்தி வரும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய விஷால், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு முதல் நிகழ்வாக தனது திருமணமே நடைபெறும் என தெரிவித்தார்.