சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - மருத்துவ கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது
சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியைச் சேர்ந்த 13 வயது சிறுமி தாய் தந்தை இல்லாமல் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் நிலையில், இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது பாட்டி விசாரித்துள்ளார். அப்போது சிறுமி கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
காரணம் சிலர் போதைப் பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறவே பாட்டி இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி வீட்டருகே உள்ள கடைக்கு சென்று தினமும் பானிபூரி சாப்பிட சென்று வரும் போது தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்கும் மாணவர் வசந்தகிரிஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடியை வாங்கி, அவருடன் தினமும் தொடர்பில் இருந்துள்ளார்.
இதன்பின் அவரிடம் ஆசை வார்த்தை காட்டி வசந்தகிரிஷ் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை நண்பர்களான சதீஷ்குமார், விஷால், தனியார் கல்லூரி பகுதி நேர உதவி பேராசிரியர் பிரசன்னா ஆகியோரிடம் வசந்தகிரிஷ் தெரிவித்துள்ளார்.
அவர்களும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது ஹூக்கா எனும் போதை பொருளை சிறுமிக்கு கொடுத்துள்ளனர். இதனையடுத்து சதீஷ்குமார், விஷால், தனியார் கல்லூரி பகுதி நேர உதவி பேராசிரியர் பிரசன்னா, வசந்தகிரிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் வசந்தகிரிஷின் தோழி ஒருவருக்கும், விஷாலின் தோழி இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.