பாம்பை அசால்டாக கையில் எடுத்து விளையாடும் சிறுமி : வைரல்!
குன்னூர் அருகேயுள்ள உபதலை ஆலோரை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்- ராஜேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் ஸ்ரீ நிஷா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில், சிறுமி ஸ்ரீ நிஷா தனது வீட்டின் முன்புறம் விளையாடி கொண்டிருந்தபோது வீட்டின் வாசலில் 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வந்துள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் பாம்பை கண்டு அச்சமடைந்த அதே சமயத்தில் சிறுமி ஸ்ரீநிஷா யாரும் எதிர்பாராத விதமாக அந்த பாம்பினை அசால்டாக கையில் பிடித்து வைத்துள்ளார். இதனை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆனால் சிறுமி ஸ்ரீ நிஷா எந்த விதமான அச்சமுமின்றி நீண்ட நேரம் பாம்பினை கையில் வைத்து விளையாடிவிட்டு பின்னர் அருகே இருந்த பொந்து ஒன்றுக்குள் பாதுகாப்பாக பாம்பினை விடுவித்தாள்.
இதனை அருகே இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாம்பை கண்டதும் அதனை அடித்து கொல்லும் இந்த உலகில் அதனை பிடித்து பாதுகாப்பாக விடுவித்த சிறுமி ஸ்ரீநிஷாவின் தைரியத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.