மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய கணவர் - ஓவியம் வரைந்து காட்டிக்கொடுத்த குழந்தை
தாயை தந்தை கொலை செய்ததை ஓவியம் மூலம் மகள் சிக்க வைத்துள்ளார்.
வரதட்சிணை கொடுமை
உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் சிவ் பரிவார் பகுதியில் வசித்து வருபவர் சந்திப் புதோலியா. இவருக்கு சோனாலி என்ற பெண்ணுடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில மாதங்களில் கூடுதலாக வரதட்சிணை வேண்டும், கார் வேண்டும் என மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக சோனாலியின் தந்தை சஞ்சீவ் திரிபாதி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
உயிரிழப்பு
காவல்துறையினர் இருதரப்பையும் அழைத்து பேசியதில் கூடுதல் வரதட்ணை வேண்டாம் என சந்தீப் கூறியதால் சமாதானம் செய்து பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து சோனாலி மீண்டும் சந்தீப் உடன் வாழ தொடங்கினார்.
இதன் பின்னர் சோனாலிக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஏன் ஆண் குழந்தை பெற்று தரவில்லை என சோனாலியிடம் வாக்குவாதம் செய்த கணவர் சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சோனாலியை தனியாக விட்டு விட்டு சென்றனர். இதையடுத்து சோனாலியின் தந்தை சஞ்சீவ் திரிபாதி மருத்துவமனை கட்டணத்தை செலுத்தி தனது மகளை வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அதன் பின்னர் மீண்டும் சமாதானம் செய்து சோனாலியை சந்தீப் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் தொடர்ந்து சோனாலியை சந்தீப் குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சோனாலி நேற்று வீட்டில் சடலமாக இறந்து கிடந்துள்ளார்.
ஓவியம் வரைந்த குழந்தை
தகவலறிந்த காவல்துறையினர் சோனாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சோனாலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தீப் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் என் மகளின் மரணத்தில் மர்மம் உள்ளது. சந்தீப் குடும்பத்தினர்தான் என் மகளை கொலை செய்து விட்டனர் என சோனாலியின் தந்தை சஞ்சீவ் திரிபாதி புகார் அளித்தார். இந்நிலையில் சோனாலியின் 4 வயது மகள், வீட்டில் நடந்த சம்பவத்தை ஓவியமாக வரைந்து காட்டினார்.
மேலும், தனது தந்தை சந்தீப், தாயை கல்லால் தலையில் அடித்து கொலை செய்தார் என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சந்தீப்பை கைது செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மற்ற குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.