4 வயது சிறுவனின் காலை பிடித்து கதற, கதற சுவற்றில் அடித்தே கொன்ற கொடூரன் - அதிர்ச்சி சம்பவம்
4 வயது சிறுவனின் காலை பிடித்து கதற, கதற சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி நர்மதா. இவர்களுக்கு சதீஷ் (6), சித்தார்த் (4) என்று 2 மகன்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சசிகுமார் சாலை விபத்து ஒன்றில் இறந்து விட்டார். இதனையடுத்து, இரு மகன்களையும் நர்மதா வளர்த்து வந்துள்ளார்.
கணவர் இறந்த பிறகு, ஒரு தனியார் வங்கியில் நிதி வசூல் செய்யும் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருடன் நர்மதா நட்பாக பழகி வந்தார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது.
இதனையடுத்து, இருவரும் கணவன் - மனைவியாகவே சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 மாதத்திற்கு முன்பு செய்யாறு மாங்கால் கூட்டுரோடு சிப்காட்டில் ஷூ கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார் நர்மதா. இதனால் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வினோத்குமார், நர்மதா, இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
வினோத்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், தினமும் நர்மதாவிற்கும், வினோத்குமாருக்கும் சண்டை வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல நர்மதா வேலைக்கு சென்றுள்ளார்.
வேலை முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்தபோது சித்தார்த் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளான். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நர்மதா கதறி துடித்தார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை மீட்டு மாமண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அப்போது, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, நர்மதா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர்.
அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்குமார், சித்தார்த்தின் 2 கால்களையும் பிடித்து சுழற்றி சுழற்றி சுவரில் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார்.
4 வயது சிறுவனை கொலை செய்தது ஏன் என்பது குறித்து மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.