ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு!

M. K. Stalin Government of Tamil Nadu
By Thahir Oct 25, 2023 08:52 AM GMT
Report

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, ஜூலை 1 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு! | 4 Percent Increase In Dearness Allowances

அரசு தொடர்ந்து பாதுகாப்பு

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.

முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

அகவிலைப்படி 4% உயர்வு

அந்தவகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலித்து, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை ஜூலை 1 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2,546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.