தமிழகத்தில் பரபரப்பு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீ வைத்து படுகொலை
கடலுார் மாவட்டம் செல்லாங்குப்பம் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குழந்தை உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தகராறு
கடலுார் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட செல்லாங்குப்பம் பகுதியில் தமிழரசி அவரது கணவர் பிரகாஷ் ராஜ் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
தமிழரசியின் சகோதரி தனலட்சுமிக்கும் அவரது கணவர் சத்குருவுக்கும் குடும்பத்தகராறு இருந்துள்ளது. இதனால் தனலட்சுமி தனது கணவரை பிரிந்து வந்து சகோதரி தமிழரசி வீட்டில் வந்து தங்கியுள்ளார்.
இதையடுத்து கணவர் சத்குரு மீது தனலட்சுமி புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்குரு தமிழரசி வீட்டிற்கு வந்து தனலட்சுமியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
4 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் இதை தடுக்க சென்ற தமிழரசி மற்றும் அவரது 8 மாத குழந்தை ஹாசினி மற்றும் தனலட்சுமியின் 4 மாத குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் தீ வைக்க முயன்ற போது சத்குரு மீதும் தீ பரவி அவரும் உயிரிழந்தார். மேலும் வீட்டில் இருந்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.