ஜாதகம் சரி இல்லையென 4 மாத குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - அதிர்ச்சி சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி, ராஜாபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், பிறந்து 4 மாதம் ஆன கோகுல் என்ற ஆண்குழந்தையும் உள்ளது.
நேற்று மகேஷ்வரன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் லதா 4 மாத கைக்குழந்தையை படுக்க வைத்து விட்டு கழிவறைக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்க்கும்போது குழந்தை படுக்கை அறையில் இல்லை. இதனால், அக்கம், பக்கத்தினரிடம் லதா தகவல் கூறி கதறி அழுதார். அப்போது, அக்கம், பக்கத்தினர் குழந்தையை நாலாபுறமும் தேட ஆரம்பித்தனர். அப்போது, பாலாறு பொருந்தலாறு ஆற்றின் கரையில் அமலைச் செடிகளுக்கு நடுவே குழந்தை மயக்க நிலையில் கிடந்திருப்பதை ஊரார் கண்டுபிடித்தனர்.
குழந்தையை மீட்ட அவர்கள் அவசர அவசரமாக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து பழனி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், லதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, லதா முன்னுக்குப்பின் முரணாக போலீசாரிடம் பேசினார். இதனால், போலீசாருக்கு லதா மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் லதாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அப்போது லதா, எனக்கு மனக்கஷ்டம். உடல்நிலை சரியில்லை. ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று கூறியதால் என் குழந்தையை ஆற்றில் தூக்கி வீசி விட்டேன் என்று வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து லதாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.