புத்தாண்டில் தொடரும் சோகம் .. சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் பலி !
சிவகாசி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஆலையில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள நிலையில், 6 அறைகள் வெடிவிபத்தில் தரை மட்டமாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அடுத்துள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
புத்தாண்டு தினமான இன்று பட்டாசு ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. வெடி மருந்தை செலுத்தும்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வெடி விபத்தில்3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 3 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஒருவர் உயிரிழந்தார். வெடி விபத்து ஏற்பட்ட ஆலையில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இதில், 6 அறைகள் தரைமட்டமாகியுள்ளது. இந்த அறைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள்தான் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆங்கில் புத்தாண்டு தினமான இன்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.