வாரம் 3 நாள் விடுமுறை; பகுதி நேர ஊழியர்களுக்கும் பென்சன் - பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா?
பட்ஜெட்டில் புதிய தொழிலாளர் சட்டம் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்
வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 நிதி ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட் உரையில், வருமான வரி, புதிய தொழிலாளர் சட்டம் குறித்த அறிவிப்புகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொழிலாளர் சட்டம்
இந்த புதிய தொழிலாளர் சட்டமானது, மூன்று கட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 500க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட பெரிய நிறுவனங்கள் முதல் ஆண்டில் இருந்தும், 100-500 ஊழியர்களைக் கொண்ட நடுத்தர நிறுவனங்கள் இரண்டாம் ஆண்டிலிருந்தும், 100க்கு குறைவான ஊழியர்களைக் கொண்ட சிறிய நிறுவனங்கள் 3வது ஆண்டு முதலும் இந்த புதிய தொழிலாளர் சட்டங்களைப் பின்பற்ற வேண்டி இருக்கும்.
நாட்டில் 83% நிறுவனங்கள் சிறிய நிறுவனங்கள் பிரிவின் கீழ் வருவதால் புதிய சட்டங்களைப் பின்பற்ற 2 ஆண்டுகள் வரை கால அவகாசம் கிடைக்கும். இந்த சட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக பணி புரியும் ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பகுதி நேர ஊழியர்கள்
பல பகுதி நேர ஊழியர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு பணி புரிகின்றனர். பணம் செலுத்தும் நிறுவனங்கள், புதிய திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்து, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பிடம் எளிதாக செலுத்த முடியும். அரசும் அதன் பங்களிப்பை வழங்கும்.
இந்த திட்டத்தின் மூலம் GIG தொழிலாளர்களுக்கு சுகாதார பாதுகாப்பு, விபத்து காப்பீடு, ஓய்வூதியம், பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு போன்றவை கிடைக்கும்.
4 நாள் வேலை
மேலும் தற்போது வாரத்தில் 5 நாட்கள் வேலை, இரு நாள் விடுமுறை ஒரு நாளுக்கு 8 மணி நேரம் வேலை என உள்ள நிலையில், வேலை நேரத்தை அதிகரித்து 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை என்ற அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை நாட்கள் குறைக்கப்பட்டாலும் அதை காரணம் காட்டி நிறுவனங்கள் சம்பளத்தை குறைக்க முடியாத வகையிலே மத்திய அரசு விதிகளை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு அதிகாரபூர்வ தகவலை வெளியிடவில்லை.