நெல்லை கல்குவாரி விபத்து: உயிருடன் மீட்கப்பட்ட 3-வது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட 3-வது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் நேற்று குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, நேற்று இரவு கல் குவாரியில் இருந்த ராட்சத பாறைகள் திடீரென சரிந்து விழுந்தது. இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கல்குவாரி விபத்தில் 3 பேர் பலியாகினர் என மீட்கப்பட்ட தொழிலாளி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், கல்குவாரியில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
கல்குவாரியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர், ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
மழையின் கரணமாக பள்ளத்தில் மண்சரிவு மற்றும் கற்கள் விழுவதனால், மீட்புப்பணியின் சிறிது தொய்வு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து மிகப்பெரிய கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டிருந்தன.
அவற்றின் மூலம் மீட்புப்பணியை எளிதாக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கல்குவாரியின் உரிமையாளரான சங்கர நராயணன் மற்றும் அவரின் மகனை போலீசார் கைது செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து ஏற்கனவே 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாவது நபர் செல்வம் என்பவரை சற்று நேரத்திற்கு முன்பு மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர்.
பின்னர், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொக்லைன் இயந்திரத்தின் அடியில் கற்குவியலில் சிக்கியிருந்த செல்வத்தை சுமார் 17 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு குழுவினர் மீட்டனர்.
தொடர்ந்து, கற்குவியலுக்குள் சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.