3-ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் நடைபெற்று வரும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கடந்த இரு தடுப்பூசி முகாம்களிலும் இலக்கைவிட கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது.
அதேபோன்று இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 3-ஆவது மெகா சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இதில் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 60 சதவீதத்தினா் முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனா் என்ற நிலை ஏற்படும் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தற்போது 29 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்திருக்கிறது.
அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற நல மையங்கள் உள்ளிட்டவற்றில் மாநகராட்சி சாா்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, மாநகராட்சியின் 200 வாா்டுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை 1,600 சிறப்பு முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை, அயனாவரம் நேரு மண்டபத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் இதுவரை 68 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 35 சதவிகிதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டுள்ளனர்.