செல்போன் பறிக்க நடந்து சென்ற பெண்ணின் கையை வெட்டிய கொடூரம்...
சென்னை காசிமேட்டில் நடந்து சென்ற பெண்ணின் கையை கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த கமலி (24) என்பவர் பிரிண்டிங் அச்சகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் அச்சகத்திற்கு வேலைக்கு சென்று விட்டு காசிமேடு கடற்கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன கமலியின் கையில் கத்தியால் வெட்டி விட்டு அவரிடமிருந்த செல்போனை பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். இதில் காயமடைந்த அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் கமலி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து முகேஷ், கார்த்தி, பரத் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.