தமிழகத்தில் அமலுக்கு வந்தது 31 மணி நேர ஊரடங்கு - என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள் தெரியுமா?
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 31 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஏற்கனவே அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை அமலுக்கு வந்துள்ளது. அடுத்த 31 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் இந்த ஊரடங்கில் திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழுடன் வருவோரை அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின் போதும், குறைந்த எண்ணிக்கையில் சென்னையில் புறநகர் ரயில் சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ரயில்களில் பயணிக்கலாம். மாஸ்க் அணியாத பயணிகளிடம் அதிகபட்சமாக சுமார் 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது. மேலும் முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.