டெஸ்ட் போட்டி ரத்தால் ரூ.300 கோடி நஷ்டம்: இந்தியா -இங்கிலாந்து வாரியம் கடும் மோதல்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே பணம் தொடர்பாக கார சார வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 வது டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெறவிருந்தது.ஆனால் அதற்கு முன்பாக இந்திய அணி நிர்வாகத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய அணி அறிவித்தது. இதனையடுத்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
ஆட்டத்தை சில நாட்கள் கழித்து நடத்தலாம் என இங்கிலாந்து வாரியம் தெரிவித்தது. ஆனால் ஐபிஎல் தொடர் வரும் 19 ஆம் தேதியன்று தொடங்கவுள்ளதால், அதற்கு பிசிசிஐ மறுத்துவிட்டது. மேலும் கடைசி டெஸ்ட் போட்டியை ஐபிஎல், டி20 உலகக்கோப்பை தொடர்கள் முடிந்த பின்னர் வேறு ஒருநாளில் நடத்தலாம் என பிசிசிஐ தெரிவித்துவிட்டது.
கடைசி டெஸ்ட் போட்டியை நடத்தாததால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் டிக்கெட்கள் விற்பனை என சுமார் ரூ.304 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய கண்டிப்பாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே போட்டி நடக்கும் என கூறப்படுகிறது.