மதுவிலக்கை கையில் எடுத்த தாலிபான்கள் - ஆப்கானிஸ்தானில் நடந்த அதிரடி சம்பவம்

Afghanistan Taliban ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் மதுவிலக்கு
By Petchi Avudaiappan Jan 03, 2022 06:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் 3,000 லிட்டர் மதுவை கைப்பற்றி அதனை ஆற்றில் கொட்டி தாலிபான்கள் அழித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். தாலிபான் அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டு உள்ளது.

இருபாலர் கல்விக்கு தடை, பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம், பெண்கள் தனியாக பயணிக்க தடை என ஏற்கனவே பெண்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை கையிலெடுத்து தாலிபான்கள் அட்டகாசம் செய்து வந்தனர். 

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் தொலைக்காட்சிகளில், டிவி தொடர்களில் பெண் நடிகர்கள் நடிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் மதுஒழிப்பையும் தாலிபான்கள் தீவிரமாக அமல்படுத்தியுள்ளனர். இஸ்லாமியர்கள் மதுபானம் தயாரிப்பது, பயன்படுத்துவது போன்றவை ஏற்புடையதல்ல என கருதும் தாலிபான்கள் மது பயன்பாட்டை ஒழிக்க தீவிரமான தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தலைநகர் காபுலில் மதுபானங்களை தயாரித்து, கடத்திய மூவரை கைது செய்த தாலிபான்கள் அவர்களிடமிருந்து 3,000 லிட்டர் மதுவை பறிமுதல் செய்துள்ளனர்.அதை காபுலில் உள்ள வாய்க்கால் ஒன்றில் பேரல்களில் உள்ள மதுவை தாலிபான்கள் ஊற்றி அழித்துள்ளனர்.