டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் - அமைச்சர் விக்னேஷ் அதிர்ச்சி தகவல்

Tamil nadu TVK
By Vinoja Jun 06, 2026 02:34 PM GMT
Report

தவெக ஆட்சியில் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை வழங்குவோம் என முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனினும், டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறை இன்னும் தொடர்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு இதுபோன்ற வசூலுக்கு எதிராக பேசிய விஜய், ஆட்சிக்கு வந்த பிறகும் நிலைமை மாறவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்திருந்தார்.

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் - அமைச்சர் விக்னேஷ் அதிர்ச்சி தகவல் | 3000 Crore Scams In Tasmac Said Minister Vignesh

இந்த நிலையில், டாஸ்மாக் துறையில் கடந்த ஆண்டுகளில் ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், செந்தில் பாலாஜியின் விமர்சனத்திற்கும் அவர் பதிலளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ் கூறுகையில்,

“போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்கள் அரசின் முக்கிய இலக்கு. இந்த நோக்கத்தை அடைய சுதந்திரமாக செயல்படுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சில மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. போதைப்பொருள் விநியோகச் சங்கிலியை முற்றிலும் உடைப்பது அவசியம். எந்த வழியிலும் தமிழ்நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைய அனுமதிக்க மாட்டோம்.

செந்தில் பாலாஜி போன்று வெறும் பேச்சில் ஈடுபடுபவர்கள் நாங்கள் அல்ல. டாஸ்மாக் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்து வருகிறோம்.

தனிநபர்கள் மற்றும் கட்சியினரிடம் சென்று கொண்டிருந்த ரூ.1,000 கோடி ஊழல் பணப்புழக்கம் தற்போது தடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் - அமைச்சர் விக்னேஷ் அதிர்ச்சி தகவல் | 3000 Crore Scams In Tasmac Said Minister Vignesh

டாஸ்மாக் மட்டுமல்ல, எந்தத் துறையிலும் இனி ஊழலுக்கு இடமில்லை என்பதே தவெக அரசின் உறுதியான கொள்கை. டாஸ்மாக் துறையில் மாதம் ரூ.100 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ.3,600 கோடி வரை மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.

இந்தப் பணம் தனிநபர்களின் கணக்குகளுக்கு சென்றுள்ளது. மதுபான விற்பனையில் மட்டுமல்லாமல், கொள்முதல் நடவடிக்கைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. கடந்த காலங்களில் டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் தவறுகள் அனைத்தும் படிப்படியாக வெளிக்கொண்டு வரப்படும்.

அதிகாரிகளிடமிருந்து பணம் வசூலிக்கும் நடைமுறையும் இருந்துள்ளது. ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கடந்த ஆண்டுகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட 600 டாஸ்மாக் ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக்கை தனியார்மயமாக்கும் திட்டம் அரசுக்கு இல்லை.

ஜூன் மாத இறுதிக்குள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக மதுபானங்கள் விற்கப்படுவதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.