300க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி போட்டு கொடூர கொலை - கொத்துக் கொத்தாக நாய் சடலங்கள்!!
ஆந்திர கிராமம் ஒன்றில் 300க்கும் மேற்பட்ட நாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டுள்ளதாக விலங்குகள் ஆர்வலர் குற்றச்சாட்டியுள்ளார்.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள லிங்கபாலம் பஞ்சாயத்து கிராமத்தில் சுற்றி திரிந்த 300க்கும் மேற்பட்ட நாய்களை விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக விலங்குகள் ஆர்வலர் லலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
லிங்கபாலம் பஞ்சாயத்து நிர்வாகம் கிராமத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் தெருநாய்களின் பெருக்கத்தை குறைக்க முடிவு செய்தது. அதற்கு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு பதிலாக, நாய்களை கொல்பவர்கள் மூலம் நாய்களுக்கு விஷம் ஊசி போட்டு அவற்றை கொலை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து 300க்கும் மேற்பட்ட நாய்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட கிராமத்துக்கு சென்று விலங்குகள் ஆர்வலர் லலிதா பார்வையிட்டுள்ளார். அங்கு பல சிதைந்த நாய் சடலங்கள் இருப்பது கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை செய்ததில், பஞ்சாயத்து அதிகாரிகளே, கொலையாட்களை தயார் செய்து விஷ ஊசி போட்டு நாய்களை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் 1960 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.