நடிகர் சங்க கட்டடம் கட்ட 30 கோடி ரூபாய் தேவை - வங்கி கடன் ஒன்றே தீர்வு..நடிகர் கார்த்தி..!

Karthi Nassar Vishal
By Thahir May 09, 2022 12:06 AM GMT
Report

நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்க இன்னும் 30 கோடி ரூபாய் தேவை எனவும், கொரோனா காலம் என்பதால், கலைநிகழ்ச்சி நடத்த முடியாது என்பதால் தேவையான தொகையை வங்கி கடன் மூலம் திரட்ட முடிவு செய்துள்ளதாகவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன.

தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ண சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 20-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

தேர்தல் முடிவில், தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணியே கைப்பற்றியது.

இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பாண்டவர் அணி, தலைவர் நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது ஆண்டு பேரவைக் கூட்ட நேற்று (மே 8) சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நடிகர் கார்த்தி, நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்க இன்னும் ரூ. 30 கோடி தேவை உள்ளது.

தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடியாது; வங்கி கடன் ஒன்றே வழி. தேவையான தொகையை வங்கி கடன் மூலம் திரட்ட முடிவு செய்து ஒப்புதல் பெறப்பட்டதாகவும் கூறினார்.

ஆரம்பத்தில் 31 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டதாகவும், அதில் 70% வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில், அதற்கு மட்டும் 19.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பாதியில் நிற்கும் கட்டட வேலைகளை முடிக்க இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், எனவே வங்கி கடன் மட்டுமே வழி அதனால் உங்கள் அனுமதி தேவை என கூறினார்.

கட்டட வேலைகள் நிறுத்தப்பட்ட பிறகு கம்பி, சிமென்ட் விலைகள் உயர்ந்துவிட்டதாகவும், இதனால் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு, நடிகர் சங்கத் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “2 வருடங்கள் காத்திருந்தாலும் அதைவிட வேகமாக செயல்படுவதற்கான ஒரு உத்வேகத்தை இந்த பொதுக்குழு கொடுத்திருக்கிறது.

இப்போது பேச்சை குறைத்துவிட்டு நாளைமுதல் செயலில் முழு வீச்சாக இறங்குவோம்.” என்று கூறினார்.

நடிகர் விஷால் கூறுகையில், “நடிகர் சங்கம் கட்டுவதற்கு தேவையான நிதியைத் திரட்டுவதற்கு நட்சத்திர இரவு கலை நிகழ்ச்சி நடத்துவதா அல்லது வங்கி கடன் வாங்குவதா என்பது குறித்து முடிவு செய்ய பொதுக்குழுவில் முறையாக அனுமதி பெற்றிருக்கிறோம்.

அதன்படி, நாங்கள் அடுத்த கூட்டத்தில் எப்படி செய்ய வேண்டும், நடிகர் சங்க கட்டிடத்தை எவ்வளவு சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டும். அதற்கு தேவையான 30 கோடியை எப்படி திரட்ட வேண்டும் என்பதை விவாதித்துக்கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட பூச்சி முருகன், “ஏற்கெனவே விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.” என்று கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது ஆண்டு பேரவைக் கூட்டத்தில், நிர்வாகிகள் பூச்சி முருகன், கருணாஸ் கார்த்தி, விஷால் ,மனோபாலா கோவை சரளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கான மீதமுள்ள நிதியை திரட்ட ஒப்புதல் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வுதியம் வழங்குவது குறித்த தீர்மானம், கடந்த 3 ஆண்டுகளில் மறைந்த 200 தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம், கொரோனா தொற்றால் உயிரிழந்த கலைஞர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.