கள்ளக்குறிச்சியில் வீட்டின் முன் கிடந்த குளிர்பானத்தை குடித்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்
கள்ளக்குறிச்சி அருகே தனது வீட்டின் முன் கிடந்த குளிர்பானத்தை குடித்த மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ். இவருக்கு 3 வயதில் ரச்சனா என்ற மகள் இருந்துள்ளார். இதனிடையே குழந்தை ரச்சனா கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு எதிரில் கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து சிகிச்சைக்காக குழந்தையை கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். அங்கு, சிறுமியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், பாதி வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
ரச்சனா குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து இவர்களுடைய வீட்டின் முன் விஷம் கலந்த குளிர்பானத்தை வீசிச் சென்றது யார் என்று வடபொண்பரப்பி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.