நிலாவில் மோதும் 3 டன் விண்வெளி குப்பையால் ஆபத்து - பெரிய பள்ளம் ஏற்பட வாய்ப்பு

moon NASA 3tonsofspacedebris
By Petchi Avudaiappan Mar 03, 2022 12:30 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை நாளை நிலவின் மீது மோதவுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின்பும் கூட விண்வெளி குப்பையாக மாறி அங்கேயே வலம் வருகின்றன. இந்த குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் கடினமாக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வந்தனர். 

இதற்கிடையில்  சுமார் 3 டன் எடைகொண்ட விண்வெளி குப்பை மார்ச் 4 ஆம் தேதி நிலவின் மீது மோதும் என கடந்த ஜனவரி மாதம் நாசா அறிவித்திருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு  அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ‘பால்கன்9’ ராக்கெட்டின் மேல்பகுதியான பூஸ்டர் தான் நிலவின் மீது மோத இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் அந்த ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் உடையது அல்ல என்றும், அது நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருவதற்காக சீன விண்வெளி ஆய்வு மையத்தால் 2014 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ராக்கெட் பூஸ்டர் எனவும் கூறப்பட்டதும் சீனா இதனை மறுத்தது. 

அது யாருடையது என்ற குழப்பத்துக்கு மத்தியில் 3 டன் எடைக்கொண்ட அந்த விண்வெளி குப்பை நாளை நிலவின் மீது மோதவுள்ளது. இது நிலவின் பின்புறத்தில் மோதவுள்ளதால் செயற்கைக்கோள் படங்கள் மூலம் பாதிப்பை உறுதிப்படுத்த வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மணிக்கு 9,300 கி.மீ. வேகத்தில் 3 டன் எடை கொண்ட குப்பை மோதுவதால் நிலவில் 33 அடி முதல் 66 அடி வரையில் பெரிய பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.