கோவில்களில் 3 வேளையும் அன்னதானம்- அசத்தல் திட்டம் தொடக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
சமயபுரம், திருத்தணி உள்ளிட்ட 3 கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.
அதில், பங்கேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் ஆகிய மூன்று கோவில்களிலும் மூன்று வேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் பங்கேற்றனர்.
இந்த திட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்ததையடுத்து சமயபுரம் கோவிலில் வாழை இலையில் ஜாங்கிரி, சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், வடை, பாயாசம் வழங்கப்பட்டது.
காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மூன்று வேளை அன்னதானம் பார்சல்களில் வழங்கப்படும் என்றும் ஊரடங்கு தளர்வு அளிக்கப்படும் வரை நாளை முதல் கோவில்களில் அன்னதானம் வழங்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஸ்ரீரங்கம், பழனி ஆகிய கோவில்களில் மூன்று வேளை அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது மேலும் 3 கோவில்களில் தொடங்கப்பட்டிருப்பதால் 3 வேளையும் அன்னதானம் வழங்கும் கோவில்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.