செல்ஃபி எடுக்க முயன்ற 3 இளைஞர்கள் ரயில் மோதி பலி - செங்கல்பட்டு அருகே சோகம்
செங்கல்பட்டு அருகே செல்ஃபி எடுக்க முயன்ற 3 இளைஞர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில்அருகேயுள்ள திருத்தேரி பகத்சிங் நகரின் பாரதியார் தெருவை சேர்ந்த குமர் என்பவரது மகன் மோகன் தனது நண்பர்கள் பிரகாஷ் மற்றும் அசோக் ஆகியோருடன் சேர்ந்து செட்டி புண்ணியம் ஊராட்சிக்குட்பட்ட அன்பு நகர் பகுதிக்கு நேற்று மாலை சென்றனர்.
அன்பு நகருக்கு செல்ல வேண்டும் என்றால் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து தான் செல்லவேண்டும் என்பதால் அங்கு சென்றவர்கள் புதிதாக போடப்பட்டிருந்த 3வது ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் ‘செல்பி’ எடுத்துள்ளனர்.
அந்த சமயத்தில் சென்னை எழும்பூரிலிருந்து தென்மாவட்டத்துக்கு செல்லும் விரைவு ரெயில் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. தண்டவாளத்தில் நின்ற வாலிபர்களை எச்சரிக்கும் விதத்தில் ரெயில் டிரைவர் ஹார்ன் அடித்துள்ளார். ஆனால் இதனை காதில் வாங்காமல் தண்டவாளத்தின் நடுவில் நின்றவாறு வாலிபர்கள் செல்போனில் செல்ஃபி எடுப்பதில் மூழ்கி இருந்துள்ளனர்.
இதனால் வேகமாக வந்த ரெயில் கண் இமைக்கும் நேரத்தில் 3 வாலிபர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட வாலிபர்களின் உடல் தண்டவாளத்தின் நாலாபுறமும் சிதறி கிடந்தது. இதனையடுத்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.