ருத்துராஜ் கெய்க்வாட்டை தட்டி தூக்க காத்திருக்கும் 3 அணிகள் - அப்ப சென்னை அணி இல்லையா?

ஐபிஎல் தொடரில் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ருத்துராஜ் கெய்க்வாட்டை இணைப்பதற்கு 3 அணிகள்  திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து அணிகளும் எந்த வீரரை தக்கவைத்து கொள்ளலாம்?, எந்த வீரரை அணியிலிருந்து நீக்கலாம்? எந்த புதிய வீரர்களை அணியில் இணைக்கலாம்? என்ற திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்து வருகிறது.

மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தங்களது அணியில் வளைத்துப் போடும் திட்டத்தை ஒவ்வொரு அணியும் மிகத் தீவிரமாக யோசித்து வருகிறது.

 

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டை ஒருவேளை சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை என்றால் 3 அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன. 

முதலாவதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுவது போல் கேஎல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து விலகி வேறு ஒரு அணியில் இணையபோகிறார் என்ற தகவல் உண்மையானால் கெய்க்வாட்டுக்கு அந்த அணியில் இடமுண்டு. கே.எல்.ராகுல் விலகவில்லை என்றாலும் ருத்துராஜ் மீதான ஆர்வத்தை பஞ்சாப் அணி கைவிடப்போவதுமில்லை. 

2வதாக நடந்து முடிந்த 2021 ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக தொடரை விட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் ஆளாக வெளியேறியது. இதற்கு முக்கிய காரணமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்பதாகும்.

அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இரண்டு வீரர்களையும் 2022 ஐபிஎல் தொடருக்கு ஹைதராபாத் அணி தக்க வைத்துக் கொள்ளாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ருத்துராஜை ஐதராபாத் அணி தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்று கூறப்படுகிறது.

3வதாக மும்பை இந்தியன்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய இரு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தவிர எந்த ஒரு வீரரையும் மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துக் கொள்வதற்கு அதிக ஆர்வம் காட்டவில்லை என்றே சொல்லப்படுகிறது.

குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் குயின்டன் டி காக் ஆகிய இருவரையும் மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ருத்துராஜை அணியில் எடுக்க நிர்வாகம் ஆர்வம் காட்டும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

எது எப்படியோ ருத்துராஜ் காட்டில் 2022 ஐபிஎல் தொடர் ஓர் பணமழை தான்..!


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்