மகிழ்ச்சியாக சைக்கிளில் சென்ற மாணவர்கள்...எமனாக வந்து மோதிய கார் - 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
மாணவர்கள் மீது கார் அதிவேகமாக மோதியதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் மீது மோதிய கார்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள வளையாம்பட்டு பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 8 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவர்கள் வெற்றி ( 13), விஜய் (13) மற்றும் சபீக் (13). இவர்கள் 3 பேரும் கிரி சமுத்திரம் பகுதியில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.
இவர்களும், அதே பகுதியை சேர்ந்த மற்ற மாணவ-மாணவியரும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சர்வீஸ் ரோட்டின் வழியாக பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை வளையாம்பட்டு மேம்பாலம் அருகே சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தபடி சர்வீஸ் ரோட்டில் பாய்ந்தது.
அந்த கார் சர்வீஸ் ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் வெற்றி, விஜய் மற்றும் சபீக் ஆகிய மூவரின் மீது பயங்கரமாக மோதியது.
மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
எதிர்பாராமல் நடந்த விபத்தில் மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதனை கண்ட மற்ற மாணவ-மாணவிகள் அங்கிருந்து சிதறி ஓடினர். கார் மோதியதில் பலத்த காயமடைந்த மாணவர்கள் வெற்றி, விஜய் மற்றும் சபீக் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் கூச்சலிட்டனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. காரில் இருந்த ஓட்டுனர் உள்ளிட்ட 2 பெண்கள் தப்பி ஓடினர்.
விபத்து குறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தங்களது பிள்ளைகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அழுது துடித்தனர்.
இதனையடுத்து, எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.