ரோகித் சர்மாவுக்கு பின் இந்தியாவின் கேப்டனாகும் 3 வீரர்கள் இவர்கள் தான்..!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ள மூன்று வீரர்கள் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா விலகியதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ஒருநாள் போட்டிக்கு கேப்டனான ரோகித் சர்மா அந்த தொடரிலும் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே அவருக்கு பதிலாக 3 வீரர்களில் ஒருவருக்கு கேப்டனாக வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
ரோகித்திற்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் மாற வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தற்போதைய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் துணை கேப்டனாக இருக்கும் கே.எல்.ராகுல் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம். அதுமட்டுமன்றி பஞ்சாப் கிங்ஸ் அணியை மூன்று ஆண்டுகளாக அவர் வழி நடத்திய அனுபவம் உள்ளவர் என்பதனால் அவருக்கு கேப்டன்சி செல்ல வாய்ப்பு உள்ளது.
இரண்டாவதாக ஏற்கனவே இந்திய அணியின் நான்காவது இடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணிக்காக கேப்டனாகவும் சிறப்பாக செய்துள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் இவர் கேப்டன்சியை பறிகொடுத்து இருந்தாலும் கேப்டனாக அவர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு ஒருநாள் கேப்டன் பதவி செல்ல வாய்ப்பு உள்ளது.
மூன்றாவதாக இந்திய அணியில் ஒரு மதிப்பிட முடியாத வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். அவரிடம் கேப்டன்சி திறன்கள் உள்ளன என்று பலரும் கூறி வந்த வேளையில் அவரை கேப்டனாக மாற்றினால் தவறு ஏதும் இல்லை என்று கிரிக்கெட் நிபுணர்களும் கூறி வருவதால் அவருக்கு கேப்டன் வாய்ப்பு கிடைத்தாலும் நன்றாக இருக்கும் என்ற கருத்து வெளியாகியுள்ளது.