2022 ஐபிஎல் மூலம் முடிவுக்கு வந்த 3 இந்திய வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை - ரசிகர்கள் சோகம்
ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டிய 3 இந்திய வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது.
இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டிப் போட்டு எடுத்த நிலையில் பல எதிர்பாராத சம்பவங்களும் நடந்தன. இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடர் மூலம் கடந்த 14 ஆண்டாக ஐபிஎல் வரலாற்றில் மாஸ் காட்டிய 3 இந்திய வீரர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
அமித் மிஸ்ரா: கடந்த 2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தேர்வான அமித் மிஸ்ரா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் வரை மொத்தம் 14 சீசன்களில் பங்கேற்று விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய வரிசையில் இடம் பெற்றுள்ள இவரை நடப்பாண்டு ஏலத்தில் வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.
பியூஸ் சாவ்லா: ஐபிஎல் தொடரில் 165 போட்டிகளில் பங்கேற்று 155 விக்கெட்களை வீழ்த்தியுள்ள 33 வயதாகும் பியூஸ் சாவ்லாவை 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை. இவர் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய வரிசையில் 4வது இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் ரெய்னா: மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் சென்னை அணியின் தூண்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா 2022 ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணியிலும் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. முதல் சுற்றில் எந்த ஒரு அணியும் ரெய்னாவை வாங்கவில்லை என்றாலும் கடைசி நேரத்திலாவது சென்னை அணி அவரை ஏலத்தில் எடுக்கும் என நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.