அதிமுக கொடியுடன் பறந்த கார்; சூட்கேஸில் மந்திரிக்கப்பட்ட மனித உறுப்புகள் - தேனியில் பரபரப்பு!
சூட்கேஸுக்குள் மனித உறுப்புகள்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் சந்தேகத்திற்கு இடமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படம் மற்றும் அதிமுக கொடியுடன் ஸ்கார்ப்பியோ கார் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதை மடக்கிப் பிடித்த போலீசார் காரை சோதனை செய்துள்ளனர். அப்போது வாகனத்திற்குள் ஒரு மூட்டை இருந்துள்ளது.
மூட்டையை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூட்டைக்குள் நாக்கு , கல்லீரல், மூளை போன்ற உடல் உறுப்புகள் ரத்தம் தோய்ந்த நிலையில் இருந்துள்ளது. அதனுடன் எலுமிச்சம்பழம், கற்பூரம், முட்டையும் இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தில் வந்த நான்கு மூன்று கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மந்திரவாதம்
இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வாகனத்தில் இருந்தவர்கள் மதுரை மாவட்டம் அய்யனார் கோட்டையைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டி, கமுதியைச் சேர்ந்த டேவிட் பிரதாப் சிங், பசும்பொன் கிராமத்தை சேர்ந்த முருகன் ஆகியோர்கள் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்களுடன் உத்தமபாளையம் பாறை மேடு பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி ஜேம்ஸ் என்பவர் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மந்திரவாதி ஜேம்ஸ் 'நள்ளிரவில் பூஜை செய்தால் அதிகளவு பணம் கிடைக்கும் என்றும் ஒரே இரவில் பணக்காரராக மாறிவிடலாம் என்றும் கூறியுள்ளார். அதற்காக பணம் செலவாகும் நான் கொடுக்கும் இந்த பணத்தை கேரளா மாநிலம் வண்டிப்பெரியாரில் உள்ள ஒருவரிடம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி ரூ.2.50 லட்சம் பணத்தை எடுத்து கேரளா மாநில நபரிடம் இவர்கள் சென்றிருக்கிறார்கள். அந்த நபர் ஒரு சூட்கேஸை இவர்களிடம் கொடுத்து இதை திறந்து பார்க்காமல் மந்திரவாதி ஜேம்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கொடுத்து அனுப்பியுள்ளார். இந்நிலையில் சூட்கேஸோடு வந்த மூன்று பேரும் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
இதனையடுத்து கைப்பற்றப் பட்ட உறுப்புகள் மனிதனுடையதா? அல்லது விலங்குகளுடையதா என்பதை கண்டறிய மதுரை தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.