இருட்டான அறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

By Petchi Avudaiappan Apr 23, 2022 06:03 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

ஆந்திராவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இருட்டறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஒருவரின் 23 வயதான பெண் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி பெற்றோர் வேலைக்குச் சென்ற சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த மருத்துவமனை ஊழியரான தாரா ஸ்ரீகாந்த் என்ற இளைஞர் அந்த ஆசை வார்த்தை கூறி தான் வேலை பார்க்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்த தனி அறைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்ற ஸ்ரீகாந்த் அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் அவரை அங்கேயே விட்டுவிட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தான் எங்கிருக்கிறோம் என தெரியாமல் சுற்றித் திரிந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதே மருத்துவமனையில் பணிபுரியும் சென்னா பாபு ராவ், ஜோரங்குலா பவன் கல்யாண் ஆகியோர் அவரை மீண்டும் அதே அறைக்கு அழைத்துச்சென்று 20 மணி நேரத்திற்கு மேலாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதனிடையே தனது மகள் காணாமல் போனது குறித்து பெற்றோர் விஜயவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் குறித்து வழக்கு பதிவு செய்யாமலும், உரிய விசாரணை நடத்தாமல் போலீசார் அலைகழித்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்து பெற்றோரே மருத்துவமனைக்குச் சென்று அந்த பெண்ணை மீட்டனர். அப்போதுதான் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. 

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தாரா ஸ்ரீகாந்த், சென்னா பாபு ராவ், ஜோரங்குலா பவன் கல்யாண் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 வயது சிறுமியை 80க்கும் மேற்பட்டோர், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.