சாகும் வரை போராட்டம் நடத்திய விவசாயிகள் - 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
சாகும்வரை போராட்டம் அறிவித்து போராடி வந்த விவசாயிகள் 5ம் நாள் போராட்டத்தில் மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த மாரனேரி கிராமம்.
இந்த கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்னர் நில உடமை மேம்பாட்டு குழு சார்பில் அளவீடு செய்து ஏழை விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், தற்போது இந்த விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்த நிலையில், இவர்களை பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் வெளியேற்ற வற்புறுத்தி வருகிறார்கள்.
இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய நிலங்களிலிருந்து தங்களை வெளியேற்றுவது நிறுத்திட வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
5-வது நாளாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி நின்று உடுக்கை அடித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது தமிழன், ராஜ் குமார், பெரியசாமி விவசாயிகள் நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் மயங்கி விழுந்தார். ஆர்ப்பாட்டத்தின்போது 3 விவசாயிகள் மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் திடீரென்று பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.