கோயம்பேட்டில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 3 பேர் கைது
சென்னை கோயம்பேட்டில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை கோயம்பேடு பகுதியை அடுத்த நெற்குன்றத்தில் அமைந்துள்ள செந்தமிழ் நகர் பகுதியில் இன்று அதிகாலை இரு வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கோயம்பேடு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு இருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்தனர்.
மேலும் காவல் துறையினரைக் கண்டதும் அவர்கள் ஓட முயற்சித்த நிலையில், அவர்களை மடக்கி பிடித்த காவலர்கள் கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த செளந்தர பாண்டியன்(19), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் வைத்து இருந்து பையில் இருந்த 4 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள்,பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இருவரிடம் நடத்திய விசாரணையில் போடியை அடுத்த டெங்குவார்பட்டியில் இருந்து கஞ்சாவை நெற்குன்றத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கு கொண்டு வந்ததாக கூறியதன் பேரில் உதயகுமாரையும் கோயம்பேடு காவல் துறையினர் கைது செய்து மூவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.