3 மாதங்களில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் - குடும்ப பெண்கள் மகிழ்ச்சி!
மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் மூன்று மாதத்தில் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் அடுத்த முடிச்சூர், திருவஞ்சேரி, அகரம் தென் ஆகிய ஊராட்சிகளில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் தி.மு.க கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை காட்டி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

அப்போது பேசிய ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அதிமுக ஆட்சியாளர்கள் நிதி நிலையை தள்ளாட்டத்தில் விட்டு சென்றுள்ளனர், அதனை சீர் செய்யும் பணியில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார்.
அதனால் தான் மகளிர் உரிமை தொகையை வழங்க முடியவில்லை. தற்போது அதற்கான கணக்கீடு பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் 3 மாதத்தில் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அப்படி வழங்கும் தொகை பயணாளி ஆயுள் முழுவதும் வழங்கப்படும். அதுபோல் சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் ரூ.100ஐ வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாக உள்ளதால் அதற்கு அங்கீகாரம் வழங்கிட பொதுமக்கள் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.