நச்சுப்புகை காரணமாக 3 பேத்திகள் உட்பட பெண் ஒருவர் பரிதாப பலி - அதிர்ச்சி சம்பவம்!
நச்சுப்புகை காரணமாக 3 பேத்திகள் உட்பட பெண் ஒருவரும் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 பேர் பலி
சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் உடையார்- செல்வி தம்பதியினர். இவர்களுக்கு சந்தியா (10), பிரியா லட்சுமி (8) ஆகிய 2 மகள்கள் உள்ளனர் . செல்வியின் அண்ணன் பூதத்தான், இவர்களது எதிர் வீட்டில் குடியிருந்து வருகிறார். அவருடைய மனைவி வேலம்மாள். இவர்களுடைய மூத்த மகள் பவித்ரா (7). கடந்த 10 நாட்களுக்கு முன்னர் உடையார் விபத்தில் சிக்கி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரை மனைவி செல்வி மருத்துவமனையில் தங்கி கவனித்து வருகிறார். இதனால் உடையாரின் தாயார் சந்தன லட்சுமி(65) குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார். நேற்று முன்தினம் சந்தான லட்சுமி மற்றும் அவரின் பேத்திகள் 4 பெரும் ஒரே அறையில் மெத்தையில் படுத்து தூக்கியுள்ளனர். நேற்று காலை 6.30 மணியளவில் வேலம்மாள் வீட்டிற்கு சென்று கதவை தட்டியபோது எந்த பதிலும் வரவில்லை.
பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டின் உள்ளே புகை மண்டலமாக இருந்துள்ளது. குழந்தைகளின் தோல் கருப்பு நிறமாகவும் இருந்ததை கண்டு வேலம்மாள் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவு உடைத்து பார்த்தபோது வீட்டில் 4 பேரும் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து அறிந்த மாதவரம் போலீசார் விரைந்து வந்து பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் வந்து ஆய்வு செய்துள்ளனர். அதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 சிறுமிகளும், மூதாட்டியும் நச்சுப்புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
மின்விசிறியில் உள்ள காயில் எரிந்து வயரில் தீப்பிடித்துள்ளது. அந்த வயரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, கொசுவை விரட்ட மின்பிளக்கில் பொருத்தப்பட்டு இருந்த லிக்விட் எந்திரத்திலும் தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது லிக்விட் எந்திரத்திலிருந்த பாட்டில் வெடித்து சிதறியது. அதில் இருந்த அமிலமும் அறை முழுவதும் பரவியது. தீப்பிழம்பு அங்கிருந்த அட்டைப்பெட்டியில் விழுந்து தீப்பிடித்தது. இதனால் அறை முழுவதும் நச்சுப்புகை பரவியது. இந்த புகையால் 4 பேரும் மூச்சுத்திணறி பலியாகி உள்ளனர்.
கொசுவிரட்டும் எந்திரத்தில் இருந்து அமிலம் சிதறியதால் அதுவும் தீப்பிடித்து நச்சுப்புகையாக மாறி உள்ளது. அறையை பூட்டிக்கொண்டு 4 பேரும் தூங்கியதால் அந்த புகை வெளியே போகாமல் அறைக்குள்ளேயே இருந்தது. இதனால் அவர்கள் 4 பேரும் பலியாகி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.