கோவை அருகே ரயிலில் அடிபட்டு 3 யானைகள் உயிரிழப்பு -சோகத்தில் மக்கள்
கோவை அருகே ரயிலில் அடிபட்டு 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் வாழ்ந்து வருகின்றது. குறிப்பாக கேரளா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மதுக்கரை, வளையாறு வனப்பகுதி அதிக யானைகள் வசிக்கும் இருப்பிடமாக உள்ளது.
இந்த யானைகளின் வழித்தடத்தில்தான் தமிழகத்தின் கோவையையும், கேரளாவின் பாலக்காட்டையும் இணைக்கும் முக்கியமான ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. சென்னை, கோவை பகுதியில் இருந்து கேரளாவுக்கும், கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கும் இந்த பாதையில் தினமும் ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் மதுக்கரை வனச்சரகம் நவக்கரை அருகே உள்ள தங்கவேல் காட்டு மூளை அருகில் 25 வயதுடைய பெண் யானை உள்பட மூன்று பெண் யானைகள் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளன. அப்போது மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் அந்த யானைகள் மீது மோதியது
இதில் ரயிலில் அடிபட்டு மூன்று யானைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இ.துபற்றி தகவல் அறிந்ததும் மதுக்கரை வனத்துறையினர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ரயில் தண்டவாள பகுதியில் மூன்று யானைகளின் உடல்களும் கிடந்தன. இது தொடர்பாக வனத்துறையினர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளையாறு, மதுக்கரை பகுதிகளில் தண்டவாளத்தைக் கடக்கும் யானைகள் அடிக்கடி ரயிலில் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் மெதுவாக செல்லும்படி ரயில் என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் ரயில்கள் யானைகள் மீது மோதுவது தொடர்கதையாக இருக்கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து யானைகள் இறப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.